இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் 5/10 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படக்கூடிய பல மாற்றங்கள் திருநங்கைகள் விசயத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்மாற்றத்திற்கு பல்வேறு மட்டங்களில் அவரவர் தளத்தில் தொடர்ந்து உழைத்த திருநங்கைகள் பலர்.
திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமென 2002ல் திருநங்கை ப்ரியா பாபு அவர்களும், வழக்கறிஞர் ரஜினியும் உயர்நீதி மன்றத்தில் ரிட்(Writ) பதிவு செய்தனர். அம்முயற்சி நல்ல பலன் அளித்தது. அதே ஆண்டு திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது.அதேசமயம் அவர்களது பாலினத்தில் ஆண்ணா பெண்ணா என்பதை திருநங்கைகள் அவரகள் விருப்பத்திற்கேற்ப நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தெளிவிள்ளாததாக இருந்தது. திருநங்கைகள் குறித்த அரசு இயந்திரத்தின் முதல் அசைவாக இதை எடுத்துக்கொள்ளலாம். இது திருநங்கைகள் நலன் குறித்த முக்கியமான கவனஈர்ப்பை ஊடகமத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. 2006ல் வழக்கறிஞர் ரஜினியின் உதவியுடன் முழுதாக ஒருவருட உழைப்பிற்குப் பிறகு என் பெயரை லிவிங் ஸ்மைல் வித்யா என்றும் பாலினம் பெண் எனவும் கெஜட்டில் மாற்ற முடிந்தது. பாலின மாற்றம் குறித்து அரசு ஆவணங்களில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் இவை.
இவற்றின் தொடர்ச்சியாக பலரது போராட்டத்தால் கவிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான திருமிகு. கனிமொழி அவர்களின் பெருமுயற்சியாலும், திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய செயல்பாடாக சமீபத்தில் திருநங்கைகளுக்கு முதலகட்டமாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மேலோட்டமாக இவை நல்ல மாற்றங்களாக இருந்தாலும், திருநங்கைகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு திருநங்கைகளின் தேவை குறித்து முழுபுரிதலோடு செயல்படவில்லையோ என்று தோன்றுகிறது. எனது நோக்கம் அரசைக் குறைசொல்வதில்லை. உண்மையில் அரசை நெருங்கும் நிலையிலுள்ள மூத்த திருநங்கைகள் முறையாக இப்புரிதலை ஏற்படுத்தவில்லை என்பதே என் கருத்து.
உதாரணத்திற்கு அடையாள அட்டை விசயத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு குடிமகளாக திருநங்கைகளுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் தேவை. அதை முழுமையாக அடைவதே திருநங்கைகள் நலத்திட்டங்களின் அடிப்படை நொக்கமாக இருக்கவேண்டும். இவ்வாறு அடிப்படை உரிமைகள் அனைத்தும் பெற திருநங்கைகளும் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதற்கு ஆதாரம் தேவை. இது அடையாள அட்டையின் மூலமே சாத்தியப்படும். திருநங்கைகளோ தங்கள் பாலினதிரிபு காரணமாக எந்த அடையாளமும் இன்றி தாய்நாட்டு அகதிகளாக சட்டத்தால் கைவிடப்பட்டோர் ஆகின்றனர். எனவே திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் என்பது அடையாள அட்டை மூலமே சாத்தியப்படும்.
ஆனால், அடையாள அட்டை என்பது தற்போது திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இந்த அடையாள அட்டை அன்று. அனைத்து ஆண்/பெண்ணிற்கு உள்ளது போல் குடும்ப அட்டையாக, வாக்காளர் அடையாள அட்டையாகவும், ஓட்டுநர் உரிமமாகவும் இன்ன பிறவாகத்தான் இருக்க வேண்டும். சொல்லப்போனால் பெரும்பாலான திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் இருக்கவே செய்கிறது. சிலருக்கு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் நிரந்தர குடியுறுப்பு (வாடகைவீடாகக்கூட) இருப்பதில்லை. அல்லது அடையாள அட்டை பெருவதற்காக இதுவரை முயற்சிக்காமல் இருப்பது.
இதுகுறித்து மேலும் விவாதிக்கும் முன் தற்போது வழங்கப்பட்டுள்ள இவ்வடையாள அட்டையை ஒரு பார்வை பார்க்கலாம். 

இவ்வடையாள அட்டையில் உள்ள தகவல்கள் புகைப்படத்துடன் சேர்த்து
அந்நபரின் இயற்பெயர் : ...........
தற்போதைய பெயர் : ...........
முகவரி : ...........
உறுப்பினர் எண் : ........... அவ்வளவே. இதிலுருந்து பெறக்கூடிய பயன் என்ன? அல்லது இந்த அட்டை இல்லாததால் இழக்கப்போவது என்ன? பொதுவாக, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் அனைத்து அடிப்படை உரிமைகளும் பெற ஆதாரமாக அக்குடிமகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை சான்றுகள் சில உண்டு.
பெயர் மற்றும் பெற்றோர் பெயர் சான்றிதழ்,
முகவரி சான்றிதழ்,
வயது சான்றிதழ்,
கல்வி சான்றிதழ்,
சாதி (மத) சான்றிதழ்,
புகைப்பட சான்றிதழ் இது போக தனித்திறமை ஏதேனும் இருந்து, விளையாட்டு போன்றவற்றில் பெற்ற சான்றுகள்.
இவற்றில் பெயர் மற்றும் முகவரி தவிர இதர முக்கிய சான்றுகளான வயது, பெற்றோர், கல்வி, சாதி சான்றுகள் குறிப்பிடப்பட வில்லை. இவை எதுவும் குறிப்பிடாத பட்சட்த்தில் ஒரு குடிமகனுக்குரிய எந்த சலுகைகளும் பெறமுடியாது. குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு. வெறும் முகவரி அடையாள அட்டையை வைத்து திருநங்கைகள் பழையபடி பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் தான் முடியும். யோசித்துப் பாருங்கள் இது திருநங்கைகள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
திருநங்கைகள் பாலின மாற்றம் பெறுபவர்களாக இருப்பதால் நியாயமாக அவர்களின் பாலின மாற்றத்தைக் குறிக்கும் மருத்துவ சான்றிதழே வழங்கப்பட வேண்டும். அதாவது ராசிபலன்/மதமாற்றம் போன்ற காரணத்தால் பெயர்மாற்றம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழைப் போல திருநங்கைகளின் பாலின மாற்றம் குறித்த சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இதில் பெயர் மாற்றுச் சான்றிதழில் குறிக்கப்படுவதைப் போல இன்ன முகவரியில், இன்ன தேதியில், இன்னாருக்கு மகனாக பிறந்த இன்னார் அவரது பாலினதிரிபு காரணமாக இன்ன தேதியிலுருந்து இனி இன்னாராக, இன்ன (திருநங்கை அல்லது மாறியபாலினம் -பெண்) பாலினமாக அறியப்படுவார் என்று சான்றளிக்கப்பட வேண்டும்.
இத்தகைய அனைத்து அடிப்படை குறிப்புகளும் அடங்கிய பால்மாற்றுமருத்துவ சான்றிதழ் மூலமாக திருநங்கைகள் தம் பாலின அடையாளம் மாறினாலும், தமது பழைய குடும்ப அட்டையில் (திருநங்கை / மாறிய பாலினம் பெண்) என மாற்றிக் கொண்டு சராசரியாக வாழமுடியும். குடும்பம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் குடும்ப அடையாள அட்டையிலிருந்து நீக்கல் சான்றிதழ் பெற்று தனியாக குடும்ப அட்டையும், தொடர்ந்து மற்ற அடையாள அட்டைகளும் பெறமுடியும்.
முக்கியமாக ஆண் அடையாளத்தில் பெற்றிருந்த கல்விச்சான்றிதழ், பணியாற்றியிருப்பின் அந்நிறுவனத்திடம் பெற்ற பணி அனுபவச்சான்றிதழ்/நன்னடத்தை சான்றிதழ் என அனைத்துயும் தொடர்ந்து பெண் அடையாளத்திலும் பயன்படுத்த முடியும். தங்கள் படிப்பை பாதியில் விட்டவர்கள் தற்போது விரும்பினால் தொடர்ந்து படிக்கவும், அல்லது அவர்களது மேற்படிப்பிற்கும் இந்த மருத்துவ சான்று ஆதாரமாக உதவும். இதுபோலவே வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும் உதவும். மற்ற அடையாள அட்டைகளான வங்கி கணக்கு, பாஸ்போர்ட் போன்றவையும் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
இது பிறப்பால் ஆணாக இருந்து இயற்கையின் விளைவால் பெண்மையை உணர்ந்து பெண்ணாக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமன்றி, பெண்ணாக பிறந்து ஆணாக வாழ்பவர்களுக்கும் பொருந்தும்.
*********
ஆணுக்கு பெண் சளைத்தவள் அல்ல. ஆண்/பெண் இருவருக்கும் சளைத்தவர்கள் திருநங்கைகளும் அல்ல எனபதை அனைவரும் உணர வேண்டும். திருநங்கைகளில் உள்ள பல படித்த, படிக்காத திருநங்கைகளுக்கு அவரவர் கல்வித்தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும்.
குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ், பாலினத்திரிபு காரணமாக குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்படும் திருநங்கைகள் தொடர்ந்து தங்கள் குடும்பத்துடன் வாழ தகுந்த வழி செய்ய வேண்டும். சில குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும் அக்கம்பக்கத்தினரின் ஏச்சிற்கு அஞ்சிய திருநங்கைகளை விலக்கி வைக்கும் நிர்பந்ததிற்கு ஆளாகிறார்கள்.
எனவே, சமூகம் திருநங்கைகளை மருத்துரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் புரிந்து கொள்ள அரசு மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, தண்ணீர்/ பெர்ரோல் போன்ற இயற்கை வளங்கைகளை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்த, வரதட்சணை, ஈவ்டீசிங் போன்ற குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தெல்லாம் பொது நலன் கருதிய விளம்பரங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல், திருநங்கைகள் குறித்தும், அவர்களையும் சகமனிதர்களாக பார்க்கவேண்டும் என்ற பொது நலன் விளம்பரங்களை அரசு செய்ய வேண்டும்.
திரைப்படங்களில் திருநங்கைகளை தவறாக சித்தரிப்பதை தணிக்கை துறை தடை செய்யவேண்டும். இவ்வாறு முறையான அடையாள அட்டை பெறுவதோடு மேலும் எத்தனையோ பல ஆக்கப்பூர்வமான காரியங்கள் திருநங்கைகள் நலனுக்காக செய்ய வேண்டியுள்ளது.
தற்போதுள்ள அரசு திருநங்கைகளின் நலனில் அக்கறையும், கனிவும் கொண்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி முன்னேறுவது நம் கையில்தான் உள்ளது. எனவே, ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் அரசு நிர்வாகத்தை நெருங்கும் இடத்தில் உள்ள திருநங்கைகள் வெறும் இனாம்களையும், சலுகைகளையும் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், மாறாக சராசரி குடிமகனுக்குள்ள அனைத்து உரிமைகளையும் திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும் எனபதை அரசிற்கு புரியவைத்து அவற்றை அடைவதற்கான சீரிய முயற்சியில் ஈடுபட வேண்டும். இதுவே, இதுநாள் வரை உரிமைகள் மறுக்கப்பட்ட, சமூக ஒருங்கிலிருந்து விலகப்பட்ட திருநங்கைகளுக்கு சரியான வலிநிவாரணியாகும். இனிவரும் தலைமுறைகள் தன்னம்பிக்கையோடும், சுயகௌரவத்தோடு தலைநிமிர்ந்து வாழ உதவும்.
திருநங்கைகள் மைய நீரோட்டத்தில் கலக்க தேவையான அனைத்து முயற்சிகளும் அரசால் எடுக்கப்பட வேண்டும். தன் குழந்தை ஒரு திருநங்கை என்பதை எண்ணி பெற்றோரும், உடன்பிறப்புகளும் வருந்தும் நிலை இனி மாற வேண்டும். சமூகமும் திருநங்கைகளை ஒரு வேடிக்கை பொருளாக அன்றி சக மனிதர்களாக பார்க்கும் நிலை வரவேண்டும். அதற்காக அரசின் உதவியோடு மனம் திறந்து ஒன்றாகப் போராடுவோம்.
திருநங்கைகள் அடிப்படை உரிமையும், அடையாள அட்டையும்.
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
4
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்
த னிப்பட்ட முறையில் எனக்கு திருமணம் என்ற சடங்கில் உடன்பாடு இல்லை என்றபோதும், ஒவ்வொரு தனிநபருக்கும் வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்திற்குப்பின் அனைத்து சூழ்நிலையிலும் ஆத்மபலமாக நிற்கும் துணையொன்று வேன்டும் என்பதில் நிச்சயம் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
பெற்றோர், உடன்பிறந்தோர், உறவுகள், நண்பர்கள் சூழ வாழும் சராசரி ஆண்/பெண்ணுக்கே வாழ்க்கைத் துணை தேவை எனும்பட்சத்தில் மேற்குறிப்பிட்ட உறவுப்புழமும், பொருளாதார பலமும் இன்றி கேள்வியாய் குறுகி நிற்கும் திருநங்கைகளுக்கு வாழ்க்கைத்துணை நிச்சயம் தேவைதானே?
திருநங்கைகள் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, திருநங்கைகள் பொது இடங்களில் சமூக ஒழுங்குகளுக்குட்படாமல் இருக்கிறார்கள் என்பதாகும். இதுவே மற்றவர்களுக்கு அவர்கள் மீது அசூசை ஏற்படுத்தி அவர்களை கண்டால் கலவரப்பட்டு ஒதுங்கி நிற்கவும், அறுவெறுத்து ஒதுக்கவும் காரணமாக சொல்லப்படுவதுண்டு. சற்று கரிசனையோடு அதன் உளவியல் பிண்ணனியை ஆய்ந்தால் நானறிந்த வரையில் அதன் காரணம், தங்களை மனிதர்களாக பொருட்படுத்தாத இச்சமூகத்தின் மீதான இயலாமையின் இறுதிப்பிடியில் ஏற்படும் காழ்ப்புணர்வு/கலகத்தின் வெளிப்பாடு என்று கருதுகிறேன்.
மாறாக, ஒருசில திருநங்கைகள் அவ்வாறன்றி இயல்பானவர்களாகவும் இருப்பதை காணலாம். அவர்களது பிண்ணனி குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பெற்றோர் அரவணைப்பில் வாழ்பவர்களாக இருப்பார்கள். அல்லது, சமூக அந்தஸ்துடன், ஓரளவேனும் சமூக அங்கீகாரம் பெற்றவர்களாக இருப்பதைக் காணமுடியும். ஆக தங்களது உடல்மொழி, ஆடை அலங்காரத்தில் குறைந்தபட்ச கண்ணியம் காக்க தேவையாய் இருப்பது ஏதோவொரு அரவணைப்பும், அனுசரனையான சூழலும் தான். எல்லா பெற்றோர்களும் திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள முன்வராத இச்சூழலில் எது திருநங்கைகள் சமூக பிரக்ஞையுள்ளவர்களாக வழிநடத்தும்?
வாழ்க்கைத்துணை?! ஆம், வாழ்க்கைத் துணையாக ஒருவன் வந்தால்! தன்னை முழுதாய் புரிந்து, முழு அன்பையும் கொட்டி அரவணைக்க ஒருவன் வந்தால்! அப்படி ஒருவன் தனக்கென ஒருவன் தன் வாழ்க்கையில் வரமாட்டானா? என ஏங்காத திருநங்கைகள் யாரும் இல்லை. வாழ்க்கைத் துணையென்று வரும் ஒருவனால் திருநங்கைகளில் வாழ்க்கைத்தரம் பல விசயங்களில் மாறும். அவ்வாறு அமையப்பெற்ற சில திருநங்கைகளில் வாழ்க்கை முறை மாறிய உதாரணங்கள் உண்டு.
சரி கேக்க நல்லாதான் இருக்கு, அதுக்காக எவன் போயி.... உங்களையெல்லாம்...
புரியுது... நீங்க வேண்டாம். என்னால ஒரு திருநங்கைய வாழ்க்கைத் துணையா பார்க்க முடியாதுன்னா கண்டிப்பா நீங்க வேண்டவே வேண்டாம். அப்ப யாருதான்...?
இருக்காங்க, சில பேர் இருக்காங்க. திருநங்கைகளை சக மனுஷியாக பார்க்கத் தயார, நட்புடன் பழகத் தயார, மனதால் இணைந்து மணம்புரிய தயாரகவும் சிலர் இருக்காங்க. ஆனால், அவர்களில் ஒருசிலர் தான் சமூகத்தின் முன்பாக துணிந்து தங்களை ஒரு திருநங்கையின் கணவனாக முன்னிருத்திக்கொள்ள தயாரக உள்ளனர். அவர்களிடம் மட்டும் தான் வேன்டுகிறேன், மறைவாக கணவனாக வாழாமல் மனமுவந்து வெளிப்படையான உண்மையான கணவனாக வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் இவ்வாறு திருநங்கைகளை மறைமுகமாக மணந்துகொண்டுள்ள ஆண்கள் வேறொரு சராசரி பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டு, திருநங்கைகள் துணைவிகள் போலவே வைத்துக் கொள்கின்றனர். மனையாள் ஒருத்தி இருக்க குறிப்பிட இடைவெளியில் வந்து போகும் ரெகுலர் கஸ்டமர் போலத்தான் திருநங்கைகளை ஏற்றுக் கொள்கின்றனர்.
சில ஆண்கள், ஆரம்பத்தில் திருநங்கையை மனைவியாக நடத்தினாலும், குடும்ப மற்றும் சமூக வற்புருத்தலின் பேரில் வேறொரு பெண்ணை மணந்து கொள்கின்றனர். இவர்களும் திருநங்கைகளை துணைவியாகவும் நாட்பட அந்த உறவையும் விட்டுச் செல்கிறார்கள். குறைந்தபட்சம் துணைவியாக ஏற்றுக் கொள்பவர்களும், முழுத்துணைவியாகவாவது ஏற்றுக் கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.
குறிப்பிட்ட நபருக்கு பெயரளவில் மனைவி/துணைவியாக் இருந்தாலும் அவர்களும் மற்றவர்களைப் போலவே பிச்சையெடுத்தோ / பாலியல் தொழில் செய்த்தோதான் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. கொடுமையிலும் கொடுமை, திருநங்கைளை துணைவியாகக் கொள்ளும் போர்வையில் திருநங்கைகள் பிச்சையெடுத்தோ, பாலியல் தொழில் செய்தோ கொண்டு வரும் பணத்தை இதுபோன்ற நபர்கள் தங்கள் சுயலாபத்திற்கும், தனது குடும்ப செலவிற்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சில திருநங்கைகள் தெரிந்தே இந்த ஏய்ப்பிற்கு உடன்படுகின்றனர். பொய்யாகவேனும், ஒரு ஆண் தன்னை காதலித்தால் போதும் என்று, அவர்களை தங்கள் கணவனுக்கு வேறொரு பெண்ணைத் தானே திருமணமும் செய்துவைத்து, அவர்கள் குடும்ப செல்விற்கு இவர்கள் சம்பாத்திது தெரிந்தே ஜோக்கர்களாக வாழ்கின்றனர். ஏதோவொரு பெயரளவு அன்பிற்கே இத்தனை இழக்கும் திருநங்கைகளின் மாளாத்தனிமையையும், தீராக் காதலையும் யார் அறிவார்?
யாரோரு ஒருசிலர் உண்மையான காதலுடன், திருநங்கையை ஏற்றுக் கொண்டு இருவரும் பரஸ்பர அன்புடன், நேர்மையுடன் வாழ்ந்தாலும், இச்சமூகம் அதாதவது நீங்கள் அந்நபருக்காக தயாரக வைத்திருக்கும் கல்லடிகள்... ஏளனம், அவமரியாதை.
திருநங்கைகள் பெறும் சராசரி அவமரியாதையைவிட அவர்களின் கணவர்கள் அடையும் அவமரியாதை அதிகம்.
" இவன் ஏன் இதுகூட சுத்துரான் ஒருவேளை இவனும்...."
" அந்த மேட்டர்ல இவன் வீக்கு போல அதான் பொம்பளய கட்டிக்காம இதப் போயி..."
இத்தகைய ஒரு சரசாரி ஆண் சில நாட்கள், சில முறை சகித்துக் கொள்ளலாம். வாழ்க்கை முழுவதும்.
இதுதான் குறிப்பாக உங்களிடன் நான் வைக்கும் கோரிக்கை, யாரோ, எவரோ ஒரு திருநங்கையை துணையாக ஏற்று வாழும் போது வாழ்த்த வேண்டாம். வாழ் வழிவிடுவோம். ஏனெனில் ஆண்மை என்பது மீசையும், குழந்தைபேறும் அல்ல, பெண்மையை மதிப்பது. அதிலும் தன் பெண்மையை உணர்ந்து அதை அடைய உடலாலும், மனதாலும் காயங்கள் பல சுமந்து, உற்றார் உறவைவை இழந்து நிற்கும் திருநங்கைகளை மதிப்பது பேராண்மையாகும்.
காதலுடன் திருநங்கைகளை ஏற்பவர்கள் கணவர்களாகட்டும். குறைந்த பட்சம் அத்தம்பதிகளை மதித்து நடக்கும் பேராண்மையுடயவர்களாக நீங்கள் இருப்பீர்களா?
திருநங்கைகள் நலனில் தொடர் அக்கறை காட்டி வரும் தமிழக அரசும், அவ்வழியே இந்திய அரசும், ஆண்கள் திருநங்கைகளை மனந்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் தரவேண்டும். இதனால், சாதக பாதகங்களை ஆராய்ந்து, தெளிவாய் முடிவடெக்க ஆண்களுக்கு உதவும். அவ்வாறு துணிந்து மணம் புரியும் ஆண்கள் மீதும் திருநங்கைகளுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் கிடைக்கும்.
போலியாக மணமுடித்து அவர்களி சுரண்டிப்பிழைக்கும் நபர்களுக்கு தண்டனையை பெற்றுத் தரவும், திருமணம் முடித்து பாதியில் விட்டுச் செல்ல நினைப்பர்களிடம் முறையாக போராடி தங்கள் உரிமையை நிலை நிறுத்தவும் திருநங்கைகள் திருமணச்சட்டம் உதவும்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பல பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர். அப்போது காந்தி இந்திய இளைஞர்களிடம், பாதிக்கப்பட்ட பெண்களை (கணவினை இழந்த பெண்களையும் என்று நினைக்கிறேன்) மணமுடித்துக்கொள்ள முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே, திருநங்கைகளையும் மணமுடிக்க வேண்டுகோள் விடுத்தார் என்றும் எடுத்துக் கொண்டு சமூக மாற்றத்திற்கு முன்வருவோம்.
சமீபத்தில் திருநங்கைகள் மணமுடித்துக்கொள்ள தயாரகவுள்ள ஆண்களுக்கு அழைப்புவிடுத்து தோழி கல்கி ஒரு வலைப்பக்கத்தை அமைத்துள்ளார். வரவேற்போம். அதே சமயம், இவ்வலைப்பக்கம் தவறான நபர்களால் பாதிக்கப்படாத வகையில் கவனமாக கையாள வேண்டும்.
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
8
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் திருநங்கை
நான் கடவுள்
பாலா, தமிழ் சினிமாவின் அழிக்கமுடியாத பெயர். பாலாவை மதிப்பவர்கள், வெறுப்பவர்கள் என இருபிரிவினரும் தெளிவாக உணர்ந்திருக்கும் தமிழ்சினிமாவின் மறுக்கமுடியாத ப்ரம்மா!
ஆண்மைத் திரட்சி கொண்ட கல்லூரி வாலிபனின் அடாவடிக்காதல், அராஜகமான சகோதர பாசம் என ஆரம்பத்தில் எரிச்சலூட்டிய சேது திரைப்படம், மனநிலை காப்பக இறுதி காட்சிகளால் என்னை கவர்ந்தது. அதேபோல், ஆண்மைத் திரட்சி கொண்ட சிறுவனுக்கு தாய் மீதான வெறுப்பு, தாய்க்கு மகன் மீதான வெறுப்பு என்ற மைய புள்ளி கொண்டு, கோபம்/வீரம்/பராக்கிரமம் கொண்ட ஆணை மையமாகப் பேசியது நந்தா. ஈழத்தமிழ் அகதிகளின் பகுதியையும் தொட்டுச் சென்றதில் என் மனதையும் தொட்டுச் சென்றது. மூன்றாவது பிதாமகனில் அதே ஆண், அதே கோபம், அதே வீரம், அதே பராக்கிரமம், அதே பித்து நிலை என அயர்ச்சி தட்டியபோதும். லோக்கல் களவானியின் களவானித்தனம், திருட்டுத்தனம், வெள்ளந்தி பாசம், நட்பு என சிறுக அன்பையும் சூர்யா பாத்திரம் மூலம் கொண்டு சென்றது.
இவ்வாறு பாலாவின் மூன்று படங்களும் பராக்கிரம, ஆண்மைத் திமிர் திரண்ட கட்டழகன்களை மையமாக கொண்ட ஆணாதிக்க படமாக, பார்வையாளர்களின் பைத்தியநிலையை, மிருகத்தை தூண்டிவிடும் வேலையையே செய்தது. இது போக வேறுசில விமர்சனங்களும் அப்படங்கள் மீது உண்டு. ஆனாலும், சராசரி திரைக்கழிவுகளுக்கு மத்தியில் மாற்று முயற்சி என்ற அளவில் பாலாமீதும், அவரது படங்களின் மீதும் எனக்கு மரியாதை உண்டு. 
வருடக்கணக்காய் காத்திருந்து, காந்திருந்து நான் கடவுள் பார்த்தவர்கள் அனைவருமே கதை குறித்து, தங்கள் விமர்சனங்களை வைத்து தீர்த்தாயிற்று. எனவே, இதுவரை, பொதுவாக அனைவரும் வைத்த விமர்சனங்கள் போக சில கருந்துகளை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேன். 
நான் கடவுளின் அகோரி வழக்கமான அதே ஆண்மைத் திரட்சியின் நான்காவது பதிப்பாக இருந்த போதும், அதைக் கடந்து வேறெந்த நாயகத்தனமும் ருத்ரனுக்கு இல்லை. உண்மையில் படத்தில் நாயகன் ருத்ரனில்லை. பிச்சை எடுக்கும் விளிம்புகளின் பிரதிநிதியாக, படத்தின் மையப்பாத்திரமாக கதையை நகர்த்துவது அம்சவள்ளி பாத்திரமே.
ருத்ரன் பாத்திரம் மூலமாக, அகோரிகளின் சடலம் சூழ்ந்த அமானுஷ்ய வாழ்க்கையை மட்டும் தொட்டுச் செல்லாமல் "நானே கடவுள்" என்ற தத்துவத்தை (கண்டிப்பாக ஆன்மீகம் அல்ல), நமக்குள் நாமே கடவுள், கடவுள் என்று தனித்து வெளியில் எதுவும் இல்லை என்பதையே இயக்குநர் பாலா முன்னிறுத்துவதாக நான் உணர்கிறேன். 
திருநங்கைகளை கேவலமாக தொடர்ந்து முன்னிறுத்தி வரும் திரைக்கோமாளித்தனங்களுக்கு மத்தியில் திருநங்கை கீர்த்தனாவின் பாத்திரம் ஆறுதலானது. திருநங்கைகள் குறித்த செயற்கை பிம்பங்கள் எதுவுமன்றி, இயல்பான நீரோட்டமாக பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றிகள். நன்றியைக் கடந்து இரு நெருடலகள். விளிம்புகள் அதிலும், பிச்சை எடுப்பவர்கள் என்று ஆனபின் ஒரு திருநங்கையையும் சேர்த்துக் கொள்வோமே என்று யோசித்து சேர்த்த பாத்திரமாகமே இத்திருநங்கை பாத்திரம் தோன்றுகிறது.
கீர்த்தனாவின் உடை சேது-ஈஸ்வரி ராவ் பாத்திரத்தின் உடையைப் போல (ஆண்சட்டை, பாவாடை) இருப்பது ஆரம்பத்தில் நெருடலாக இருந்தாலும், பிச்சைத் தொழில் முதலாளியிடம் பணிபுரியும் திருநங்கையாக வரும் இப்பாத்திரத்திற்கு இவ்வுடை பொருத்தமாகவே உள்ளது. (புடவை/சுடிதார் கட்டி முழு பெண்நிலையில் வாழும் பெண்கள் இத்தகைய சூழலில் வாழும் வாய்ப்பில்லை என்பது நிதர்சனம்) வாய்ப்பை பயன்படுத்தி, கூட்டாமல் குறையாமல் இயல்பாக தன் பணியை செய்து முடித்த திருநங்கை தோழி கீர்த்தனாவிற்கு வாழ்த்துக்கள்.
சரி, இப்படி திருநங்கையை கண்ணியமாக காட்ட இப்பாத்திரம் தேவை என்று சந்தோசப்படும் வேலையில், நயந்தாரா வேடம் கடுப்பேற்றுகிறது. அப்பாத்திரம் திருநங்கை அல்ல என்ற போதும், குறிப்பாக எண்விளையாட்டில் சிக்கிக் கொள்ளும் விதமாக நயந்தாரா என்ற பாத்திரப் பெயரும், சுருக்கமாக நயன் என்று அலைக்கப்படுவதும் தேவையற்ற குழப்பதை, அதன் மூலம் அருவெறுப்பையுமே ஏற்படுத்துகிறது.
எல்லாவற்றையும் விட என்னை மேலும் குழப்பமடையச் செய்யும் மிகப்பெரிய கேள்வியொன்று உள்ளது. இத்திரைப்படத்தின் அடிநாதமே விளிம்புகளை சுற்றி அமையும் நிலையில், அறுவெறுப்பான முகத்தோற்றம் கொண்ட ஒருவனை, அவனக்கு இருக்கும் இயல்பான பாலியல் தேவையை ஆபாசமானதாக, குற்றமாகக் காட்டியது ஏன்? தன் முகம் அசிங்கமாக இருப்பவனுக்கு காமம் மறுக்கப்படதாக சொல்வது எந்தவிதத்தில் நியாயமாக முடியும்? தன் முகம் இப்படி இருக்கும் நிதர்சனம் உணர்ந்து, கண்பார்வையற்ற ஒரு பெண்ணை மணக்க நினைப்பதிலும் என்ன குற்றம் இருக்க முடியும்? நியாயமாக, கண்தெரியாமல் பிச்சை எடுத்து வாழும் அம்சவள்ளி பிச்சை எடுப்பதைவிட அப்பணக்கார, தோற்றத்தில் அருவெருப்பான முகம் கொண்டவரை திருமணம் செய்வதில் என்ன ஆபத்து உள்ளது? பொற்காலம் படத்தில் இறுதிக்காட்சியில் வடிவேல் "கறுப்பான எனக்கெல்லாம் உன் தங்கச்சியக் குடுக்கக்கூடாதுன்னுதான நினெச்ச?" என்று கேட்பது நினைவிற்கு வருகிறது. 
இப்படத்தின் முடிவு மிகவும் ஆபத்தான அரசியலை முன்வைக்கிறது. அகோரி ஆங்காரம் கொண்டு தீயவர்களை அழிக்க, தீயவை அழிய வேண்டும் என்று தெளிவாக சொல்லப்பட்ட பின்பும் வாழமுடியாதவர்களும் இறந்து போகவேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அநியாயம். எத்தனை காரணங்கள் சொன்னாலும், ஆன்மிகத்தளத்தில் விளக்கமளித்தாலும் திரைப்படத்தின் முடிவும், தீர்வும் மிகவும் கண்டனத்திற்குரியது. இதை இயக்குநர் பாலா உணர்ந்துதான் செய்துள்ளாரா என்பதை பேட்டியெடுக்கும் நிருபர்கள் கேட்டு சொன்னால் கொஞ்சம் உதவியா இருக்கும்.
இறுதியாக, தனது வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு மிருகமல்லாத, மானுடம் பேசும் மாற்றுப் படமொன்று தரவேண்டுமென்று இயக்குநர் பாலாவின் சராசரி ரசிகையாக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
37
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் திரைப்படம்
ஈழத் தமிழர் தோழமைக் குரல் - பாராளுமன்ற முற்றுகை நிகழ்பதிவு
அ ப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான புவியியல் வன்முறையை, சிங்கள ராணுவரசின் தமிழின சுத்தீகரிப்பு கொடுமையை, இந்திய அரசின் நிழல் போரை, ஆயுத உதவி மற்றும் இராணுவ பயிற்சியை நிறுத்தக் கோரி பிப்ரவரி 12, 13, 14 ஆகிய மூன்று தினங்களும் இந்திய நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் சிறப்பாக நடந்தேறியது. 
எழுத்தாளர்கள்/கவிஞர்கள் தலைமையில், மாணவர்கள், மீனவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், திருநங்கைகள் மொத்தம் 100 பேர் இணைந்து அரசியல் கட்சி சார்பற்று மனிதம் காக்க வேண்டும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையுடன் நடத்திக்காட்டினர்.
இம்மூன்று நாள் போராட்டத்தில் அம்மை நோயின் காரணமாக முதல் இரண்டு நாட்கள் மட்டுமே என்னால் பங்குபெறமுடிந்தது. முதல் இரண்டு நாட்களும் நடந்த அறப்போர் வெறும் மனத்திருப்தியன்றி தீர்க்கமான பலன் அளிக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. ஆனால் இரண்டாம் நாள் இலங்கை தூதரகம் முன்பாக 28 பேர் கொண்ட குழு நடத்திய இரகசிய போராட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ராணுவ ரத்தவெறியன் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு, ராஜபக்சே உருவப்படத்தில் செறுப்படி, போர் நிறுத்தம் மற்றும் இந்திய, இலங்கை அரசுக்கெதிரான முழக்கம் என அதிதீவிர போராட்டமாக அமைந்தது. 2 நிமிடத்திற்கு மேல் எந்த போராட்டமும் நிகழ்த்த முடியாத அப்பாதுகாப்புப் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடம் தீவிரம் குறையாமல் ஒரு சடங்கியல் நிகழ்வு போல, மொத்த ஈழமக்களின் ஆக்ரோசமும், கண்ணீரும், வலியும் வழிநடத்தியது போல, யாரும் யாருடைய கட்டுப்பாடும் இன்றி முழு அர்ப்பணிப்போடு அப்போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்கினர். இதுவரை, தேசிய அரசு ஊடகங்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த ஈழப்பிரச்சனை அன்று சிறிதளவேனும் கவனம் பெற்றதும் அதையொட்டிய சில அரசியல் நிகழ்வுகள் ஏற்பட்டதும் இப்போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். 
கட்சி சார்பின்றி முழு அர்ப்பணிப்போடு, தூயமையான உள்ளத்தோடும் போராடிய அக்குழுவை தீண்டவும் அஞ்சி நின்றது தில்லி காவலர்கள் குழு. மிக கண்ணியாமாக, சிறைபிடிக்கப்பட்டு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு இரவு 7 மணியளவில் சேர்த்தனர். 
ஈழத் தமிழர் தோழமைக் குரல் என்ற குடையின் கீழ் நடந்த இவ்வறப்போரட்டத்தை குறித்த முழு தகவல்களும் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. தமிழின விடுதலை வேண்டிய நிகழ்ந்த தாமதமான முயற்சி என்றாலும், மிக மிக அவசியமான முன்னுதாரணமான சுயலாபமற்ற முயற்சி இது. பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய இதன் அமைப்பாளர்களான திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மற்றும் கவிஞர்கள் மாலதி மைத்ரி, சுகிர்தராணி மூவருக்கும் என் மனமார்ந்த தீரவாழ்த்துக்கள்.
இப்போராட்டம் முழு அர்த்தம் பெற தொடர்ந்து மக்கள் புரட்சியாக மாறவேண்டும். மாநிலம் முழுவதும் இப் போர் நிறுத்தப் போராட்டத்தை நாம் அனைவருமாக முன்னடத்திச் செல்ல வேண்டும். சோம்பலை, தடைகளைக் கடந்து பங்காற்றுவோம்.
தமிழ் ஈழம் வெல்லட்டும்! மானுடம் வெல்லட்டும்!!
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
2
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் அனுபவம், அரசு, ஈழம், கண்டனம், சமூகம், பொது, முத்துக்குமார்
ஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்
என் சுரணையை சுண்டியெழுப்பிய சகோதரன் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி!
1970, 80களில் இருந்த மாணவர்களிடையேயான தன்னெழுச்சி ஒரு சிறு அலையாக இப்போது மீண்டும் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. இது நாம் எதிர்பார்க்காத நல்ல ஆரம்பம். விடலை விளையாட்டிலும், பொழுதுபோக்கு களியாட்டத்திலும் இளமையை வீணடித்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இம்மாற்றம் காலத்தில் கட்டாயம் ஏற்படுத்திய நல்மாற்றம். ஆனால், அதையும் வளரவிடாமல் தடுக்க காலவரையற்ற விடுமுறையளித்து, விடுதி மாணவர்களை கட்டாயமாக ஊருக்கு அடித்துத் துரத்தி தன் ஜனநாயக அத்துமீறலை நடத்துகிறது தமிழக அரசு.
மனசாட்சியால் உந்தப்பட்ட மானமுள்ள பெருவாரி மனிதக்கூட்டம் நேற்று முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் அணி திரண்டது. அது குறித்த செய்தியோ பெரும்பான்மை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து தன் பாசிச முகத்தை பள்ளிளுத்து காட்டியது. தமிழகம் அல்லாத வேறு எந்த மாநிலத்திலும் இம்மக்கள் எழுச்சி ஊடக கவினம் பெறாமல் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது. (விதிவிலக்கு ஆஜ்தக்)
போதாக்குறைக்கு, மாணவர்களின் ஒற்றுமையை போர்க்குணத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாய் கல்லூரிகளுக்கு, காலவரையற்ற கட்டாய விடுமுறையும், விடுதி வெளியேற்றமும் செய்துள்ளது தமிழக அரசு. இங்கே நாம் யோசிக்கவேண்டியது உங்களையும் என்னையும் போன்ற மனிதர்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதையும் விட, சகமனிதர்கள் என்ற நிலையில் அவர்கள் சந்திக்கும் அல்லல்களில் ஒரு சதவீதம் எமக்கு ஏற்பட்டால் என்ன செய்வோம்? தப்பு, வேண்டாம் அதுகுறித்து நான் எந்தக் கேள்வியும் கேக்கப்போவதில்லை. எனக்கும் உங்களுக்கும் அது தெரியாமல் இல்லை. தெரிந்தேதான் கையறு நிலையில் வெறும் அமைதி காக்கிறோம்.
நான் கேட்க விரும்புவது சுரணை, கோபம், இயலாமை மிஞ்ச நம் கற்பனைக்கு மீறி தன் உடலை பொசுக்கிக் கொண்ட சகோதரன் முத்துக்குமாரனின் மரணவாக்குமூலம் நம் மீது காறி உமிழ்வது எதனை? முத்துக்குமாரின் சுரணையில் ஒரு துளி, கோபத்தில் ஒரேயொரு புள்ளி அளவாவது நம்மிடம் இருக்குமானால் நாம் என்ன செய்யலாம்...?
********
என்ன செய்வது என்று யோசித்த சில படைப்பாளிகள், மனித உரிமைப் போராளிகள், மாணவர்கள், உழைப்பாளிகள் என்று பலதரப்பட்ட அன்பர்கள் ஒன்றுகூடி நாடுதளுவிய எழுச்சிப் போராட்டத்தை இந்தியத் தலைநகரத்தில், நாடாளுமன்றத்தின் முன்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஏன் நாடாளுமன்றம் முன்பு?
நாடாளுமன்ற இறுதிக் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி துவங்கவுள்ளது. தமிழக அரசு கள்ள மௌனம் சாதிப்பதை நாம் அனைவரும் வெளிப்படையாக அறிந்திருக்கையில், தமிழகத்தில் நமது போராட்டம் புல்லுக்கு இறைக்கும் நீராய் வீணாகிக் கொண்டிருக்கிறது. நமது இலக்கு நாமே மத்திய அரசின் கவனத்தை நேரடியாக பெறுவது. மாநில அளவில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே தன்னெழுச்சி அலை தீவிரமாக இருக்கும் இந்நிலையில் நாடு தழுவிய தீவிர போராட்டம் மத்திய அரசின் கவனத்தையும், அயல்நாடுகளின் கவனத்தையும் பெறவேண்டியது அவசியமாகும்.
ஈழமக்கள் மீதான இனப்படுகொலைக்கு (சிங்கள ராணுவத்திற்கு) இந்திய அரசு அளித்துவரும் ஆதரவையும், ஆயுதங்களையும் திரும்பிப்பெற வேண்டும். தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கி அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி இப்போராட்டம் நடைபெறவுள்ளது. தனித்தனி இயக்கங்கள் ஏதோவொரு நாளில் தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக அல்லாமல் அனைவரும் ஒன்று கூடி பெருந்திரளாக அணிதிரண்டு தில்லியிலுள்ள மாணவர்கள், மனித உரிமை போராளிகள் அனைவருடன் ஒன்றுகூடி இந்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பேரணியில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்பமுள்ள அன்பர்கள்
பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்
+91 98410 43438
+91 97897 12488
அயல்நாடுகளில் அல்லது கலந்து கொள்ள வாய்ப்பில்லாத ஆர்வமுள்ள நண்பர்கள் இப்பேரணி சென்றுவர, சில தினங்கள் அங்கே தங்க தேவைப்படும் பொருளாதார உதவியும், இம்முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளும் அளித்து உதவ வேண்டுகிறோம்.
தன் மரணம் நிச்சயமாக ஒரு அதிர்வை, முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்க்கமாக அறிந்தே தன் இன்னுயிரையும், தன் கனவுகளையும், தன் உறவுகளையும் தீயிடம் அர்ப்பணித்தான் நம் சகோதரன் முத்துக்குமாரன். அவனது மரண வாடை கருகித் தீர்வதற்குள் மேலும் மரணங்கள் ஈழத்தில் நிகழாமல் தடுப்போம். மனிதர்களாய் சகமனிதர்களை நேசிப்போம்... மனிதம் காப்போம். நன்றி!!
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
10
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் ஈழம், சமூகம், பொது, முத்துக்குமார்
2009 - புத்தகக் கணக்கு
கடந்த வருடத்தில் அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில் மேலோட்டமான கருத்துகணிப்பில், எனது புத்தகம் இரண்டாவது இடம் பிடித்ததாக ஒரு வார இதழ் பட்டியலிட்டிருந்தது. கவனம் நன்றாக விற்பனையானது என்று தான், சிறந்த புத்தகம் என்றல்ல(அதான் எனக்கே தெரியுமேன்னு சொல்றிங்களா!).
இதுவரைக்கும் எனது புத்தகம் குறித்து நான் எப்போதும் பேசிக்கொள்ளாததற்கு காரணம் தன்னடக்கம்னு தப்பா நெனச்சிங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல. உண்மையான காரணம், ஒரு முழு பெண்ணா ஸ்மைலியாகவே என்னைப் பார்த்து பழகிவிட்ட என் தோழமைகளிடம் என் கடந்த காலத்தின் இருளை காண்பித்துக் கொள்ள இருந்த மனத்தடை. அப்புறம் எதுக்கு புத்தகம்? இணையம் அல்லாது பொது வாசகர்களுக்கும் ஒரு புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். அதிலும், கிழக்கு எனது சொந்த வாழ்க்கைக் கதையையே அத்தியாமாகச் சொன்னால் நம்பகமான சாட்சியமாக இருக்குமே என்று கேட்டுக்கொண்டதன் விளைவு தான் இந்த புத்தகம். இதில் எனது சந்தோசம் ஓரளவு விற்பனை இனிவரும் மாதங்களில் வரும் பொருளாதார பிரச்சனைக்கு துணையாக உதவும் என்பதே.
* * *
புத்தக வாசிப்பின் அதீத எல்லையை சற்றேறக்குறைய அடைந்தவர் எனது வணக்கத்திற்குரிய ஆசான் திரு. மிஷ்கின். சமீபத்தில் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் சினிமாவிற்கு முன்பு கண்டிப்பாக படிக்க வேண்டிய 11 புத்தகங்களை பட்டியலிட்டிருந்தார். குறிப்பாக எனக்கு, வடிவேல் மற்றும் ஈஸ்வரிக்கு எந்த தமிழ்புத்தகத்தையும் (பட்டியலிலுள்ள இரண்டினைத் தவிர) தற்காலிகமாக தொடக்கூடாது என்றும் கூறிவிட்டார். தமிழ்துரோகியெல்லாம் கிடையாது அதற்கான காரண காரியம் வேறு. இதுபோக, Richard Bachன் Jonathan Livingston Seagull என்ற புத்தகத்தையும் தனிப்பட்ட முறையில் எனக்கே எனக்கென வாசிக்கத் தந்துள்ளார்.
அவர் பரிந்துரைத்த புத்தகங்கள் தனிப்பட்ட முறையிலும், சினிமா ஆர்வமுள்ள இளையவர்களுக்கும் உதவுமென்றே கருதுகிறேன்.
1. SIDDARTHA - Herman Hesse, Penguin publishers
2. DOLL'S HOUSE - Ibson
3. THE SOUND OF WAVES - Yukio Mishima, Vintage books USA (ISBN:9780 6797 52684)
4. பஞ்சதந்திரக் கதைகள் (தமிழில்)
5. ஒரு வடக்கன் வீர கதை Script (தமிழில்) - சுரா, காவ்யா பதிப்பகம்
6. GRIMM'S FAIRY TALE - Jacob Ludwig Carl Grimm, Pantheon Books (ISBN:9780 3947 09307)
* Rose But
* The Queen Bee
* The Frog Prince போன்ற குறிப்பிட்ட சில கதைகள் மட்டும்
7. ON DIRECTING FILM - David Mamet, Penguin, (ISBN:9780 1401 27226)
8. CRONICALS OF DEATH FORETOLD - Gabrial Garcia Marquez
9. OUTSIDER - Albert Camus, Penguin, (ISBN:9780 1411 82506, 9780 1402 74172)
10. LONE WOLF AND CUB, VOL(1) - Kazuo Koike
11. METAMORPHOSIS - Franz Kafka, Penguin, (ISBN:9780 1431 05244, 9780 1402 83365)
எண் (7) டேவிட் மேமத் எழுதிய ON DIRECTING FILM தவிர மற்ற புத்தகங்கள் சினிமாவிற்கு நேரடி தொடர்பில்லாதவை போல தோன்றலாம். ஆனால் ஒரு திரைக்கலைஞருக்கு தீவிர இலக்கிய பிண்னணி கட்டாயம் வேண்டும் என்பது அவரது அறிவுரை. மேலும் அயல் இலக்கியங்களை கூடுமானவரை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிப்பதையே அவர் பரிந்துரைக்கிறார்.
மேற்குறிப்பிட்ட புத்தகங்களில் எண் வரிசை 3, 4, 6, 7, 10, 11 புத்தகங்கள் எனது முயற்சிகள் எதிலும் கிடைக்கவில்லை. நண்பர்கள் முன்வந்து இப்புத்தகங்களை எனக்கு பெற்றுத்தந்தால் பேருதவியாக இருக்கும்.
* * *
நான் மோகிக்கும் நாடக வல்லரசு ச.முருகபூபதி. இந்த ஆண்டிற்கான தேசிய நாடக பள்ளி நடத்தும் நாடக விழாவிற்கான பயணத்திற்கு வழியனுப்பிவிட்ட சென்னை சென்ட்ரலில் நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்தேன். நாடகம் மீதான, கலை இலக்கியத்தின் மீதான என் இரசனையில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது அறிமுகம் கிடைத்த நாள் முதல் அவருடைய நாடகங்களில் பங்கேற்க முயன்று பல காரணங்களால் கூடாமல் போனது. இப்போது நாடகத்திற்கான அத்தனை செட் ப்ராப்பர்ட்டீசுடன், நடிக நண்பர்கள் செல்ல நான் மட்டும் வழியனுப்பிவிட ரணமாக இருந்தது.
பயணநேரத்தின் அவசரகதியில் இருந்தவர்களை ஏக்கமாக வேடிக்கை பார்த்தபடி மனதைத் தேற்றிக்கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக, அவரது "செம்மூதாய்" நாடக நூல் தொகுப்பினை பையிலிருந்து நீட்டினார். புது புத்தகத்தின் வாசத்தை நுகர்ந்துகொண்டிருக்கும் போது, "இப்பத்தான் கைக்கே புக்கு வந்துச்சு, முத பிரதிய உனக்கு தான் தரேன்" என்று ஆனந்த அதிர்ச்சியூட்டினார். இவ்வருடத்தின் மிக முக்கிய பரிசு இப்புத்தகம்.
இத்தொகுப்பில், செம்மூதாய் உட்பட ஆறு நாடகங்கள், யவனிகா ஸ்ரீராம், குட்டி ரேவதி, பாண்டி முனி, ஆகியோரின் விமர்சனங்கள் இவற்றுடன் அவரது நீண்ட தெளிவான நேர்காணல் ஆகியவை உள்ளது. முருகபூபதியின் நாடகங்களை பார்ப்பதற்கு/படிப்பதற்கு முன் இந்நேர்காணல் படிப்பது அவ்வனுபவத்தை முழுமையாக்க உதவும். நேர்காணலையும், விமசர்னங்களையும் மட்டும் படித்தாச்சு. நாடகங்களை இனிதான் படிக்க வேண்டும். அழகான அச்சாக ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இப்புத்தக கண்காட்சியில் முதல் புத்தகமாக, குமரன் தாஸ் எழுதிய கட்டுரைத் தொகுப்பான "தமிழ்த் திரையின் நிழல் அரசியலும், நிஜ அரசியலும்" வாங்கினேன். படித்தேன். நூறு சதவீதம் என் கருத்துகளோடு ஒன்றிப்போன கருத்துகள். அனைத்தும் நான் எழுத நினைத்து, எழுதாமல் விட்டவை. மனநெருக்கத்தை ஏற்படுத்திய இப்புத்தகம் தோழமை பதிப்பகத்தின் சிறந்த வெளியீடு. இளம் சினிமா உதவி இயக்குநர்கள் படித்து தங்களை சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியமான புத்தகம்.
சந்தியா பதிப்பகம் வெளியுட்ட திருநங்கை ப்ரியா பாவுவின், "மூன்றாம் பாலின முகம்" என்ற நாவலை எனது ஆவணக் காப்பகத்திற்காக வாங்கிக் கொண்டேன். கூடவே சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக, எனது அபிமான எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யாவின் "எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்" நூலையும் வாங்கிக் கொண்டேன். மேலே குறிப்பிட்ட 11 புத்தகங்களையும் வரிக்குவரி டிக்சனரி வைத்து படிக்கவே இந்த ஆண்டு பத்துமான்னு தெரியாது.
* * *
இதுவரை வலைப்பூவில் ஓரளவு தேறும் விதமான சில கட்டுரைகளையும், மற்ற இதழ்களில் வந்த கட்டுரைகளையும் தொகுத்து புத்தகமாக போட முயற்சித்தேன். பட வேலைகளில் அது முடியவில்லை. பிப்ரவரிக்கு பின்பு அதற்கான பணியில் இறங்குவேன்.
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
13
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் அனுபவம், இலக்கியம், திரைப்படம், புத்தகம்
புத்தாண்டு - புன்னகை பார்வையில்
அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்ந்த்துக்கள். இவ்வருடம் தாங்கள் வேண்டிய காரியங்கள், திட்டங்கள் அனைத்தும் வெற்றி காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கடந்த 2008 திருநங்கைகளுக்கு மிகவும் சாதகமானதாகவே அமைந்த்து. கல்லூரியில் திருநங்கைகள் சேர்க்கை, திருநங்கைகள் நலவாரியம், திருநங்கைகள் கணக்கெடுப்பு, வாக்காளர் /அடையாள அட்டை என பல நல்ல மாற்றங்கள் அரசு தரப்பில் ஏற்பட்டுள்ளன.
திருநங்கைகளிடமும் பல நல்ல மாறுதல்களைக்காண முடிந்தது. திருநங்கை சகோதரி ரம்யா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் அரசியல் கட்சியில் இணைந்து கட்சிப்பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவர் தொடர்ந்து அதிகாரத்திற்கு வரவேண்டும் திருநங்கைகளுக்கான பிரதிநிதியாக பல அரசியல் மாற்றங்களை கொண்டுவர வாழ்த்துவோம். இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது வீட்டிற்கும் வெள்ளிதோறும் விஜயம் செய்து வெற்றி பெற்றுவருகிறார் திருநங்கை ரோஸ். திருநங்கை என்ற அங்கீகாரத்துடன் சென்னைப் பலகலைக்கழகத்தில் முதுகலை பத்திரிக்கையியல் பயின்று வருகிறார் கிளாடி என்னும் இளைய தலைமுறை திருநங்கை. இப்படி இன்னும் பல வெற்றி சான்றுகளை 2008 தமிழகத்திற்கு தந்து தன் கடமையை செவ்வனே செய்து முடித்துள்ளது.
****
இனி 2009 செய்யவேண்டியதெல்லாம்,
அரசு, திருநங்கைகளுக்கு எது சரியான தேவை என்பதை முழுதாக உணர்ந்து வேலைவாய்ப்பு, முழு கல்வி வாய்ப்பு, பெற்றோர் உதவியின்றி படிக்கும் திருநங்கைகளுக்கு உள்ள பொருளாதார, தங்குமிட சிக்கல்கள் தீரும் வண்ணம் பகுதி நேர வேலைவாய்ப்பு,தங்குமிட வசதி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல், இவை அனைத்திலும் மிக முக்கியமாக குடும்ப மற்றும் சமூக அங்கீகாரம் பெற்றுத்தருதல் ஆகியவற்றில் சிந்தனை செலுத்தவேண்டும்.
தற்போது வருகின்ற திரைப்படங்களில் திருநங்கைகளை நல்லவிதமாக காட்டவேண்டும் என்ற பிரக்ஞை இருக்கின்ற அளவில் சரியான புரிதல் இல்லை உதாரணமாக தெனாவெட்டு. (இன்னும், சிலம்பாட்டம் போன்ற சில்லறை படங்களில் திருநங்கைகளை அசிங்கப்படுத்தும் ஈனச்செயலையும் நிறுத்தவில்லை-வெறுத்துப் போயிட்டேன், ஒன்னும் சொல்றதுக்கில்லை)அவ்வாரில்லாமல் சரியான புரிதலோடு, மிகையில்லாத கதாப்பாத்திரங்களாக திருநங்கைகள் திரையில் வலம்வர இப்புத்தாண்டு உதவ வேண்டும்.
இன்றும் சில திருநங்கைகள், தங்களது உரிமை / தேவைகளாக இலவச வீடு, அடையாள அட்டை, திருநங்கைகளுக்கு தனி கழிப்பிடம் என மொக்கையான வேண்டுகோள் வைப்பதை விட்டுவிட்டு, தெளிவாக கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு, சமூக அங்கீகாரம், குடும்ப அங்கீகாரம் அதற்கான விழிப்புணர்வு இவற்றை முன்மொழிய வேண்டும் என்பது எனது புத்தாண்டு வேண்டுகோள்.
****
சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வரும் ஜெமினி சர்க்கஸ் காட்சியை பார்த்தேன். சிறுவயது முதல் பார்த்தவை என்றாலும் இப்போதும் பார்ப்பதற்கு பரவசமாக இருந்த்து. சில ரிஸ்கான சாகஸத்தின் போது பார்க்க பயமாக சீக்கீரம் முடிந்திடாதா என்றும் தோன்றியது. சிலச்சில தவிர்க்கமுடியாத குறைகளைத் தாண்டி பெரும்பாலான சாகஸங்கள் ரசிக்கும்படியாக சிறப்பாகவே இருந்தது. எனது மனவருத்தமெல்லாம் ஒவ்வொரு சாகசம் முடிந்தபின்னும் அக்கலைஞசர்கள் பார்வையாளர்களிடம் இருந்து கைத்தட்டல்களை பெருமித்துடன் எதிர்பார்க்க அங்கங்கு ஒருசிலரே கைத்தட்டுவதை காணமுடிந்த்து. பார்வையாளர்களில் பலர் மெய்மறந்து ரசிக்கவில்லை அதனால், அவர்களது கலையை அங்கீகரிக்கவும் இல்லை. ஏதோ ஒரு விடுமுறையை, சில மணித்துளையை செலவு செய்யத்தான் இப்படிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் என்ற எண்ணம் நம்மில் பெரும்பான்மையோரிடம் உள்ளது.
கலையை கொண்டாடுங்க, அங்கீகரிங்க இல்லைன்னா இருக்கவே இருக்க உங்க வீட்டு முட்டாள் பொட்டி. வானத்தில் பொய்யாய் பறந்து, ஒரு குச்சி பல குண்டாந்தடியை அநாஸ்யமாய் தாக்கும் காமிடியையே பார்த்து பொழுத போக்குங்க..
எதோ புத்தாண்டுக்கு என்னால முடிஞ்ச கருத்து....
***
நண்பர்களே திருநங்கைகள் குறித்த தங்களது சந்தேகங்கள் அல்லது அவர்கள் மீதான தங்களது விமர்சனங்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு சந்தேகம் / விமர்சனம் என தலைப்பிட்டு பின்னூட்டமிடவும். அவற்றை தொகுத்து, பயன்படும் கேள்விகளுக்கு என் பதிலை தனிப்பதிவாக தருகிறேன். நன்றி!!
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
20
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் அரசு, திருநங்கைகள்
